Sunday, February 22, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 3

உதிராதபூக்கள் - அத்தியாயம் -3




சிந்து தனது படுக்கையில் அமர்ந்து, நகங்களை சீராக்கிக்கொண்டிருக்கையில், மாடியில் துணி காய போட்டுவிட்டு வாளியுடன் நுழைந்தாள் கிரிஜா.

'ஹேய், என்னடீ...இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?' என்றாள் ஆச்சர்யமாக.

சிந்து பதிலேதும் பேசாதது கண்டு சற்றே கலவரமாகி, சிந்துவின் அருகில் வந்து அமர்ந்தாள் கிரிஜா.

'என்னடீ ஆச்சு... மேட்டர் முடிச்சிட்டானா?' என்றாள்.

சிந்து கிரிஜாவை கண்களில் பார்த்துவிட்டு, நடந்ததை முழுவதும் விவரித்தாள்.

'நினைச்சேன் சிந்து.. இந்த ஓவர் படிப்ஸெல்லாம் இப்படித்தான் இருக்கும்... நான் அப்பவே சொன்னேன்.. நீ தான் கேக்கலை.. அவன் ரொம்ப ஓவராத்தான் பண்ணியிருக்கான். மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு. நிறைய பொண்ணுங்க வந்து பேசுதுல?..அந்த திமிறு.. இவனையெல்லாம் நீ திரும்பியே பாத்திருக்கக் கூடாது.' என்றாள் கிரிஜா கோபமாக.

சிந்து எதுவும் பேசாமல் அமைதியாக தனது நகங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

'சரி சிந்து.. உன் இஷ்டம்..அப்போ வினய் உனக்கு வேணாம்ல?' என்றாள்.

நகங்களை பார்த்துக்கொண்டிருந்த சிந்து சட்டென திரும்பி,  கிரிஜாவை ஒரு கணம் ஆர்வமுடன் பார்த்தாள்.

'ஏன் கிரி? நீ ட்ரை பண்ண போறியா?' என்றாள்.

'ஏன் கூடாது?.. நீதான் முரளின்னு செட் ஆயிட்டல?'

'செட் ஆயிட்டேன்னு யாரு சொன்னா? முரளிக்கு ஒரு சான்ஸ் குடுத்தேன். அதை முரளி சரியா பயன்படுத்திக்கலை'

'அதுனால?'

'அதுனால, அடுத்த வாய்ப்பை வினய்க்கு தரலாம்ன்னு பாக்குறேன். அதுல அவன் தேறுகிறானா பார்க்கணும்' என்றாள் சிந்து.

கேட்டுக்கொண்டிருந்த கிரிஜா வெறுமனே 'ம்ம்ம்ம்ம்' என்றாள்.

'சரி கிரி.. நானும் போய் என் துணிகளை துவைச்சு காயப்போட்டுட்டு வந்துடறேன்.. மெஷின் இப்போ ஃப்ரீயா தானே இருக்கு?'

'ஆமா சிந்து.. சீக்கிரம் போ.. வேற யாரும் வர்றதுக்குல்ல?'

சிந்து எழுந்து பாத்ரூம் செல்ல, கிரிஜாவின் பார்வை, படுக்கையின் மீதிருந்த சிந்துவின் மொபைல் மீது அர்த்தமாக விழுந்தது.

வினய் முக நூலில் இருந்தபோது, லேசான அதிர்வுடன் ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

'ஹாய்'

எண் புதியதாக இருக்கவே, யாராக இருக்குமென்று ஒரு நொடி ஊகித்து, யார் பெயரும் குறிப்பிட்டு தோன்றாமல்,

'ஹலோ, இது என்னுடைய புதிய மொபைல். இன்னும் பெயர் கூட வைக்கவில்லை. பழைய போனிலிருந்து தொடர்புகளை இன்னும் மாற்றவில்லை. நீங்கள் யார் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?' என்று மிக மிக நாகரீகமாக ஆங்கிலத்தில் பதில் அனுப்பினான்.

உடனேயே பதில் வந்தது.

'என் கம்மல் காணோம். நீங்க எடுத்தீங்களா?'

வினய் சட்டென பிரகாசமானான். எதையோ டைப் செய்து, சற்று யோசித்து, பின் அதை அழித்துவிட்டு,

'ஆமா, என்கிட்ட தான் இருக்கு..' என்று பதில் அனுப்பினான்.

'ஏன் எடுத்தீங்க?'  மீண்டும் குறுஞ்செய்தி வந்தது.

'உங்களைப் போலவே அழகா இருந்தது. ஒரு உரையில ரெண்டு கத்தி வேணாம்னு எடுத்துட்டேன்'

அந்தப் பக்கமிருந்து ஒரு புன்னகை வந்து விழுந்தது. தொடர்ந்து,

'நாங்க ட்வின்ஸ்.. அப்படித்தான் இருப்போம்' என்றது.

'நாங்க திருடங்க.. நாங்களும் அப்படித்தான் இருப்போம்'  என்றான் இவன்.

ஒரு புன்னகை கண்ணடித்தது. தொடர்ந்து,

'என் கம்மலை திருப்பிக் குடுங்க'

'நான் உங்க கம்மலை உங்ககிட்ட குடுத்துட்டா. உங்க கம்மல் உங்களை என் கிட்ட குடுத்துடுமா?'

'சோ ஸ்வீட்'

'ஸ்வீட் வேணாம்.. நீங்க மட்டும் தான்'

'முதல்ல கம்மலை திருப்பி குடுங்க...அடுத்தவங்க பொருள் உங்களுக்கு எதுக்கு?'

'அதே தான் நானும் கேக்குறேன்.. அடுத்தவங்க பொருள் உங்களுக்கு எதுக்கு?'

'நான் எதை வச்சிருக்கேன்?'

'என் இதயத்தை'

'என்கிட்ட அப்படி எதுவும் இல்லை'

'ஓஹோ.. ஏகப்பட்டது வச்சிருகீங்களா.. அப்போ என்னோடது எங்கயாவது ஓரமா இருக்கும்.. கம்மல் தரும்போது நானே தேடி எடுத்துக்குறேன்'

'எப்ப தரீங்க?'

'நீங்க எப்ப சொல்றீங்களோ, அப்போ?'

'சொல்றேன்' என்று மட்டும் வந்தது இறுதியாக.

வினய் அந்த எண்ணை தனது மொபையில் Love11 என்று பதிவு செய்தான்.


 - இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com)

Sunday, February 15, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 2

உதிராதபூக்கள் - அத்தியாயம் 2



முரளியும் , சிந்துஜாவும் கிழக்கு கடற்கரைச்சாலையில் அந்த கடற்கரையோர ரிசார்டில் சந்தித்தபோது, மணி மதியம் 12 ஆகிவிட்டிருந்தது.

'இப்போ என்ன ப்ளான்?' என்றாள் சிந்து.

'வந்தாச்சு.. மணி 12. பசிக்கிது சிந்து.. சாப்டுடலாம்' என்றான் முரளி.

இருவரும் கடலை பார்த்த திக்கில், அமர்ந்தார்கள். கடலின் அலைகள் அவர்களை விழுங்குவது போல் பொங்கி வருவதும், பின்வாங்குவதுமாக இருந்தது. உச்சத்து சூரியனின் உக்கிரத்தில் கடல் அலைகள், வெள்ளி பாத்திரங்கள் போல் மின்னின.

இருவரும் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தார்கள்.

'நேத்து ஃபேஸ்புக்ல போட்டிருந்தியே உன் ஃபோட்டோ...அது செம சூப்பர் சிந்து.. செம்ம அழகா இருந்த நீ' என்றான் முரளி.

'நானா! ஃபோட்டோவா! இல்லையே..  நீ வேற யாரோடதோ பாத்துட்டு சொல்றன்னு நினைக்கிறேன் முரளி'

'ச்சே.. நீயே தான்.. என்ன சிந்து..டெய்லி உன்னை சைட் அடிக்கிறேன்..எனக்கு தெரியாதா?'

'டேய்.. ஃபோட்டோ போடலைடா.. ஒரு ரோஜாப்பூ தான் போட்........' என்று இழுத்த சிந்து கொஞ்சமாய் கண்களை சுருக்கிவிட்டு,

'டாய்... கேடிப்பயலே' என்று முரளியை அடிக்கப் பாய்ந்தாள்.

முரளி சிரித்தான்.

'என் ரூம்க்கு போறவழியில ஒரு வீட்டுல பூத்திருந்தது அந்த ரோஜா.. நல்லா இருந்திச்சுன்னு ஃபோட்டோ எடுத்து போட்டேன்'

'நீ செல்லும் வழியில் பூக்கும் பூக்கள் கூட உன் சாயலில்'

'அடடா!! கவிதை கவிதை..'

'அட விடும்மா, அது க்ளிஷே ஆகிப்போச்சு' என்று முரளி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, சர்வர் சிக்கன் பிரியாணியும், வஞ்சிரமீனும் கொண்டு வந்து வைத்து பரிமாறினார்.

'முரளி, இதை எங்க சுட்ட?'

'இதுன்னு இல்லை. எல்லா சிக்கனையும் அடுப்புலதான் சுடுவாங்க‌.. '

'ஹைய ஜோக்கு!..  கவிதை மாதிரி ஏதோ சொன்னியே அதை எங்க சுட்டன்னு கேட்டேன்'

'ஓ...அதுவா, ஒரு ப்ளாக்ல'

'அதானே பாத்தேன்'

'ஏன்?'

'சொந்தமாத்தான் எழுதிட்டியோன்னு'

'அட!.. சொந்தமா எழுதினாதானா? '

'ஆமா! கவிதைன்னா சும்மாவா? எல்லாருக்கும் எழுத வந்துடுதா என்ன? அதெல்லாம் தனி ஸ்கில்.. அவ்ளோ லேசுல எல்லாருக்கும்லாம் வந்துடாது முரளி'

'அட சும்மாயிரு.. சிந்து.. கவிதையே பொய்தான்...'

'ஓஹோ.. அப்போ நீ சொன்னது பொய்யா?'

'இல்லையா பின்ன? நீ செல்லும் வழியில் மட்டுமல்ல... பூமியில் பூக்கும் அத்தனை பூக்களிலும் கூட உன் சாயல்தான்'

'கொல்றியே.. என்னை இங்கயே கவுத்துடுவ போல?'

சிந்துஜா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, கினிகினியென்று செல்போன் மணி அடிக்க, முரளி எடுத்து ஹலோ என்றான். அந்தப் புறத்தில் பெண்ணின் குரல் கேட்டதும் சிந்துவுக்கு சுருக்கென்றது.

தொடர்ந்து முரளி பேசிக்கொண்டே இருக்கையை விட்டு எழுந்து தள்ளிச்சென்றான். சிந்து சிக்கனை ருசித்துக்கொண்டே முரளியை அவதானிக்கத்துவங்கினாள்.

சிக்கனும், மீனும் ஸ்வாஹா ஆகும் வரை முரளி கடற்கரை மணலில் ஒரே இடத்தில் நின்றுகொண்டு, கடலை பார்த்தபடி பேசிக்கொண்டே இருந்துவிட்டு திரும்பி வந்து உட்கார்ந்தான்.

'சாரி' என்றான்.

'எடுத்து குடுத்தா போட்டுக்குவேன்' என்றாள் சிந்து உதட்டுச்சுழிப்புடன்.

'ஹேய்... ' என்றுவிட்டு பிரியாணியில் கைவைக்க முரளியின் மொபைலில் ஒரு  குறுஞ்செய்தி வந்து விழுந்தது. முரளி ஒரு கையால் சாப்பிட்டுகொண்டே இடது கையால் மொபைலை துழாவினான். சிந்து முரளியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

'அப்புறம் சொல்லு சிந்து... எப்போ உனக்கு ப்ராஜெக்ட்ல ரிலீஸ் சொல்லியிருக்காங்க'

'எங்கடா சொல்றான் அந்த மேனேஜரு.. நல்லா வழியிறான்.. வேற ஒண்ணும் பண்ண மாட்டேங்குறான். நானும் எத்தனை தடவை தான் கேக்குறது... போன தடவை ஒன் டு ஒன்ல சொல்லிட்டேன்.. கத்துக்க வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டாச்சு.. இனிமே கத்துக்க ஒண்ணும் இல்லை.. ஸ்ப்ரிங் கத்துக்குறது எனக்கு க்ரோத்.. ஒரு மாசம் தான்..அதுக்குமேல என்கிட்ட ப்ராடக்ட்டிவிட்டு எதிர்பார்க்காதீங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.. ஒரே மாசம் தான் நீ வேணா பாரேன்'

மொபைலை நோண்டியபடியே, இருந்த முரளி சொன்ன 'ம்ம்... ம்ம்' அபஸ்வரமாக வந்து விழுந்ததை குறித்துக்கொண்டபடியே துப்பட்டாவின் முனையில் முடிச்சு போட்டு அவிழ்த்துக்கொண்டிருந்தாள் சிந்து.

முரளி,

'ஹ்ம்ம்... விடு.. இந்த கம்பெனியே இப்படித்தான்.. எப்படியோ ப்ராஜெக்ட்ல உனக்கு ப்ரமோஷன் தந்தா சரிதான்'  என்றபோது, சட்டென சிந்துவின் துப்பட்டா முடிச்சு, சரியாக மூன்று நொடிகளுக்கு நின்று பின் தொடர்ந்தது.

'ஆமாமா, ப்ராஜெக்டல கிடைச்சாலே போதும்தான்' என்றாள் சிந்து, இமைக்காமல் முரளியைப் பார்த்தபடியே.

மொபைலில் இருந்து தலையை தூக்கி முரளி இப்போது சிந்துவைப் பார்த்து சினேகமாய் சிரிக்க, பதிலுக்கு சிந்து சிரித்ததில் இருந்த வெறுமை சட்டென உறுத்தியது முரளிக்கு.

தட்டுகள் காலியாகிவிட, எழுந்து கைகழுவிவிட்டு, பில் செட்டில் செய்து விட்டு, கடற்கரை மணலை நோக்கி முரளி நடக்க எத்தனிக்க, சிந்து ,

'முரளி, நான் கெளம்பறேன்' என்றாள்.

'கெளம்புறியா.. என்ன சிந்து இப்போதானே சாப்டோம்.. கொஞ்ச நேரம் பேசலாமே' என்றான் முரளி.

'பேசின வரை போதும் முரளி. எனக்கு போகணும்' என்றாள் சிந்து கராறாக.

'என்ன சிந்து இப்படி பேசுற.. என்னாச்சு.. பேசணும்னு தானே வந்தோம்?'

'ஆமாமா, ஆனா நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலையே' என்று சிந்து வெடுக்கென்று சொன்ன‌போது முரளி சற்று திடுக்கிட்டுத்தான் போனான்.

'எ... என்ன சொல்ற சிந்து.. எப்போ?' நாக்கு குழறியது முரளிக்கு.

'ஓஹோ ..எப்போன்னு கூட தெரியலை.. தப்பு என்னோடதுதான் முரளி.. நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலை.. ஒரு நாளைக்கு பத்து பேர் என் பின்னாடி சுத்துறானுங்க.. ஆனா எனக்கு உன் உழைப்பு புடிச்சிருந்தது..  நீ பேசுற அடாமிக் பிஸிக்ஸ் பிடிச்சிருந்தது.. அதை புரிஞ்சிக்க நீ எவ்ளோ  படிச்சிருக்கணும்? எத்தனை புக்ஸ ரெஃபர் பண்ணியிருக்கனும்..  இன்னிக்கு கிடைக்கிற நேரத்தை என் பின்னாடி சுத்துற பசங்க, இதே மாதிரி வேற பொண்ணு பின்னாடியும் சுத்தியிருக்கலாம்ன்னு யோசிக்காத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கிட்ட போனா, உன்னையே தான் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்வானுங்க. நம்பித்தொலைக்கணும். வேற வழியில்லை.. உன்னை மாதிரி பசங்க பேசுற அடாமிக் பிஸிக்ஸே, உனக்கு கிடைக்கிற நேரத்துல நீ என்ன பண்றன்னு சொல்லுது. கண்ணு முன்னாடி நேரத்தை உபயோகமா அறிவுப்பூர்வமா செலவு பண்ணினதுக்கு கணக்கு காமிச்சிட்டு கூப்ட பாத்தியா, அது புடிச்சிருந்தது. அதுனால நீ கூப்பிட்டதும் விருப்பப்பட்டு வந்தேன்.. ஆனா, உன்னை நம்பி வந்தவ நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலை. யாரோடவோ பேசிட்டிருந்துட்டு வர.. ஏன் முரளி? அதிகமா படிச்சிட்ட திமிறா? என்னை மாதிரி நிறைய பொண்ணுங்க பின்னாடி வர திமிறா? இல்லை, நீ கேட்டதும் ஓகே சொல்லி வந்துட்டேனேன்னு சீப்பா நினைக்கிறியா? உன் உழைப்பை மதிச்சு வரவங்களை புரிஞ்சிக்கோ முரளி. அதை உதாசீனப்படுத்துறது நல்லா இல்லை' படபடவென்று பேசினாள் சிந்து.

'ஓ காட்.. சிந்து.. அம் சாரி.. உண்மையாவே சாரி... நா...'

'ஒண்ணும் வேணாம் முரளி..  உன்னை மாதிரி பசங்கலாம் இப்படி பண்ணுறதுனாலதானோ என்னமோ பொண்ணுங்க பின்னால சுத்துற பசங்களா பாத்து செட்டில் ஆயிடறாங்க.. பரவாயில்லை முரளி.. உலகத்துல நீ மட்டும் தான் படிச்சிருக்கேன்னு இல்லை.. எத்தனையோ ஆம்பளைங்க இருக்காங்க‌.. எனிவே முரளி, நான் கிளம்பறேன்.. நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம்' என்றுவிட்டு முரளியின் பதிலுக்கு காத்திராமல் நடந்தாள் சிந்து.

பொங்கி வந்து பின் தங்கும் அலைகளுக்கு நடுவே, முரளி தனியனாய் நின்று சிந்துவையே பாத்துக்கொண்டிருந்தான்.


 - இலக்கியா தேன்மொழி
ilakya.thenmozhi@gmail.com

Monday, February 9, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 1

மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த மொபைல் ஃபோன் சிணுங்கியது. வாலாட்டியபடி அறையின் ஓரமாக தனது கால்மேல் தலைவைத்து வெறுமனே அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, புசுபுசு, ஜானி, அதிர்ந்து எழுந்து, ஒரே தாவாக மேஜை மீதேறி, மொபைலை கொஞ்சமாய் முகர்ந்து பார்த்தது.

சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸாப்பில் வினய் ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான்.

சிந்துஜா ஃபோனை படுக்கையில் வீழி எறிவதற்கும், குளியல் அறையில் ஷவர் நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஜானி இப்போது மேஜையிலிருந்து, படுக்கைக்கு தாவி, மீண்டும் மொபைலை முகர்ந்து பார்க்கத் துவங்கியது. இரண்டு வினாடி தாமதத்திற்கு பிறகு சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். கூந்தலுடன் டவல் பாம்பெனெ பின்னிக்கிடந்தது. படுக்கையில் ஜானி வாலாட்டியபடி ஆர்வமாக கால்களால் எத்திக்கொண்டிருந்த மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் மொபைலை படுக்கையிலேயே எறிந்தாள்.

பார்த்துக்கொண்டிருந்த ஜானி, திடுக்கென துள்ளி படுக்கையை விட்டு அவசரமாக இறங்கி, மேஜையின் கீழே, பூகப்பத்துக்கு நடுங்கி நிறபது போல நின்றுகொண்டு ‘அவ்’ என்றது.

சிந்துஜா கண்ணாடி முன் நின்றாள். டவளைக் களைந்து தலைமுடி துவட்டத்துவங்கினாள்.

‘நீ என்ன சொல்லப்போற சிந்து?’ என்றாள் கிரிஜா.

‘எதுக்குடீ’

‘அந்த பசங்களுக்கு தான்’

‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’

‘நான் என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்.. அந்த முரளி சுமார்தான்..’

‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா சொல்லித்தருவான். வினய்க்கு ஸ்டைல் தவிர வேற ஒண்ணும் தெரியாது.’

‘ஆமா.. நாலு சுவத்துக்குள்ள அடாமிக் பிஸிக்ஸ் தெரிஞ்சா என்ன ? தெரியாட்டா என்ன?’

சிந்து மெளனமாக தலைகோதிக்கொண்டிருந்தாள். ஜானி இப்போது பெண்களுக்கிடையில் வந்து வாலாட்டி அண்ணாந்து பார்த்தது.

‘வினய் சூப்பரா இருக்கான்.. செவப்பா அழகா.. உயரம் என்ன ஒரு அஞ்சரை இருக்குமா? செம ட்ரஸ்ஸிங் சென்ஸ்.. அவனோட முடிய கோதிவிட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்.. அவன் யமஹாவுல வரும்போது அது பறக்கும் பாரு..ச்சே செம ஸ்டைலுடீ.. நீ அதிர்ஷ்டக்கட்டை தான்.. ‘

சிந்து இதற்கும் ஏதும் சொல்லவில்லை.

‘என்னடீ சிந்து, நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீ எதுவும் பேச மாட்டேங்குற?’

‘நான் என்ன சொல்ல? நீ உன் ஒபினியன் சொல்லிட்டு இருக்க. நான் கேட்டுட்டு இருக்கேன்’

‘என் ஓபினியனா? அப்போ உனக்கு இதெல்லாம் தோணலையா?’

சட்டென்று திரும்பிய சிந்து, சீப்பை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்துவிட்டு, கிரிஜாவை இழுத்துவந்து படுக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்தாள். ஜானி இப்போது இல்லக்கில்லாமல் அங்குமிங்கும் உலாத்திவிட்டு, மீண்டும் படுக்கை மீது தாவி ஏறி, தலையணையை முகர்ந்தது.

‘கிரி, நாம பொண்ணுங்க. நாம தான் ஆம்பளைங்களை தேர்ந்தெடுக்கணும். சரியான ஆளுக்கு நாம வாய்ப்பு தரணும். இப்போ நீ சொல்ற மாதிரி, வினய்க்கு வாய்ப்பு குடுத்தா என்னாகும்? எப்படா பொண்ணு கிடைப்பான்னு திரியிற பசங்களுக்கு பைக்கும், ஸ்டைலும் இருந்தா போதும்ங்குற எண்ணம் வந்துடாதா? அப்படி வந்துடுறதுனால தான், அதுமட்டும் போதும்ன்னு சுத்துறானுங்க.. இவனுங்க அத்தனை பேருக்கும் நாளைக்கு கல்யாணம் ஆகும்.. இவனுங்க இப்படி ஸ்டைலு, பைக்குன்னு சுத்தினா, வாழ்க்கை மேல தன்னம்பிக்கை எப்படி வரும்? இவனுங்க தான், தன்னோட தன்னம்பிக்கையின்மையை மறைக்க, பொம்பளையை குத்தம் சொல்வாங்க. அவ‌ சுதந்திரத்தை கெடுப்பாங்க‌. அடக்குமுறை பண்ணுவாங்க ‘

‘அதுக்காக?’

‘கொஞ்சம் யோசிச்சு பாரு. வினய் ஸ்டைலு தான். லுக் தான். ஆனா, முரளிக்கு நாளைக்கு வேலையே கிடைக்கலைன்னாலும் , அவன் தெரிஞ்சு வச்சிருக்குற பிஸிக்ஸ், மேத்ஸ வச்சு எப்படி வேணாலும் பொழைக்கலாம்.. ட்யூஷன் சென்டர் வைக்கலாம். படிப்பு சொல்லிக்கொடுக்கலாம். இவ்ளோ கஷ்டமான விஷயத்தை புரிஞ்சிக்கிறவன், நாளைக்கு பொண்ணு மனசையும் புரிஞ்சிக்குவான். அவனுக்கு நாளைக்கு கல்யாணம் ஆனா, அவனுக்கு பொண்டாட்டியா வரவ‌ பணத்துக்காக நிச்சயமா கஷ்டப்படமாட்டா..’

‘அப்போ பணம் தான் எல்லாமுமா, சிந்து?’

‘கட் தட் க்ராப்.. சோஷியல் மோடிவேஷன் கிரி. நான் ஒரு உலகம் சொல்றேன் அதை கற்பனை பண்ணு. அந்த உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களும் முரளி மாதிரி சரியான ஆண்களுக்கு மட்டும் வாய்ப்பு குடுக்கிறாங்க. அப்போ என்னாகும்?’

‘என்னாகும்?’

‘கிரி, நீ ரொம்ப அப்பாவியா இருக்க. சரித்திரத்தை புரட்டிப் பாரு. துவக்கத்துல நாய்ன்னு ஒரு இடம் இல்லவே இல்லை. ஓநாய் இனம் தான் இருந்துச்சு. கொஞ்சம் ஏமாந்தா மனுஷனையே சாப்டுடும். அதை கொஞ்சம் கொஞ்சமா மனுஷன், தான் வேட்டையாடுர மாமிசத்தை தூக்கிப் போட்டு வளர்த்தான். மனுஷன் வீசுற மாமிசத்துக்கு பழகின ஓநாய்கள்ல ஒரு பகுதி, வேட்டை குணம் மறைஞ்சு நாய் இனமா ஆயிடிச்சு. இன்னிக்கு நாம தூக்கிக் கொஞ்சுற ஜானி, அப்படி உருவான ஒண்ணு தான்.’

‘என்ன சொல்ல வர, சிந்து?’

‘நாம பழக்கப்படுத்தணும் கிரி. நமக்கு வேண்டியதுக்கு, ஆம்பளைங்களை நாம பழக்கப்படுத்தணும். அவனுங்க நம்மளை பழக்கப்படுத்தலை? ஜீன்ஸ் போடாத.. இதை செய்யாத..அதை செய்யாதன்னு.. அவனுங்க தெளிவாதான் இருக்காங்க. நாம தான், அவனுக்கு நம்மளை புடிக்கணுமேன்னு நம்மளை நாமே மாத்திக்கிட்டு அவங்களையும் குழப்பி, நாமும் குழம்பறோம்.. நாம தெளிவா இருக்கணும். எவ்ளோ தான் நம்ம கிட்ட சீன் போட்டாலும் நாம முரளி மாதிரி ஆளுங்களைத்தான் தேர்வு பண்ணுவோம்ன்னு தெரிஞ்சிட்டா, அவனுங்க ஏன் சீன் போடப்போறாங்க. நாம வழி மாறி போய்டுவோமோன்னு பயந்துதான் ஒரு பாதுகாப்புணர்வுக்காகத்தான் அவங்க நம்மளை அடக்குறாங்க. நாம வழி மாறி போகமாட்டோம்ன்னு தெரிஞ்சா, அவங்களும் நம்மளை கட்டுப்படுத்த மாட்டாங்கன்னு தோணுது. ட்ரிக்கர் நம்ம கிட்ட தான் இருக்கு கிரி’

கிரிஜா சிந்துஜாவையே பார்த்துக்கொண்டிருக்க, சிந்து தொடர்ந்தாள்.

‘பெண்கள் நாம தான் தேர்ந்தெடுக்கணும் கிரி. நாம உபயோகமான ஆம்பளையை தேர்ந்தெடுத்தாதான், நமக்கு வேண்டாதது, தானாவே பொழைக்க வாய்ப்பில்லாம அழிஞ்சிடும். என்னைக்கேட்டா அரை மணி நேர சந்தோஷத்துக்கு கூட எந்த பொண்ணும், ஸ்டைலு, அழகுன்னு ஒரு ஆம்பளைக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. அப்படி குடுக்க குடுக்க தான், நம்மகிட்டயே வாழ்ந்துட்டு நம்மளையே பின்னால ஏய்க்கிறானுங்க. அடக்க ட்ரை பண்றானுங்க. ஸ்டைலு, அழகு வேற. தன்னம்பிக்கை, திறமை வேற. யோனியோட சக்தின்னா என்னன்னு காமிக்கணும் கிரி இவனுங்களுக்கு. என்னோட தேர்வு முரளி தான். முரளிக்கு தான் நான் வாயப்பளிக்கப்போறேன்’ என்றாள் சிந்து தெளிவாக.

இப்போது ஜானி, அவரகள் இருவருக்குமிடையே வந்து, சிந்துவின் கால்களின் மேல் தனது முன்னங்கால்களை பரப்பி வைத்து எம்பி, முகத்தருகே வந்து சிந்துவுக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்தது.

– இலக்கியா தேன்மொழி
ilakya.thenmozhi@gmail.com