Monday, October 12, 2015

தி மார்ஷிய‌ன் - திரைப்படம் விமர்சனம்

தி மார்ஷிய‌ன்  - திரைப்படம் விமர்சனம்


ஜோர்டான் நாட்டின் மலைபிரதேசங்களை நூறு கோடி ரூபாய் செலவில் 3டி யில் காட்டவெனவே ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

ரிட்லீ ஸ்காட்டின் மார்ஷியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மார்ஸ் கிரகம் இப்படியெல்லாமா இருக்கிறது! என்று நீங்கள் ஆச்சர்யப்பட தேவையில்லை. கையில் கொஞ்சம் பணம் இருந்தால், ஜோர்டான் நாட்டுக்கு செல்லுங்கள். அங்கே தான் இந்தப்படத்தில் வரும் பெரும்பாலான மலைப்பாங்கான இடங்களை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள்.

மார்ஷியன் படத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. கேஸ்ட் அவேயில் தனியான தீவில் மாட்டிக்கொள்ளும் டாம் ஹாங்க்ஸ் போல, ஆராய்ச்சிக்கென ஒரு குழுவாக வந்துவிட்டு, திடீரென வரும் சூராவளியால் மார்ஸ் கிரகத்தில் தனித்து மாட்டிக்கொள்கிறார் மார்க் வாட்னி.



காப்பாற்றப்படும் வரை அந்த கிரகத்தில் பிழைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி வருகிறது, நாஸாவுடன் எப்படி தொடர்பு கொள்கிறார் என்பதையெல்லாம் ஒரு சினிமாக்காரராக இல்லாமல், ஒரு கதாசிரியராகவே, மயிலாப்பூர் கோயிலுக்கு அருகே கிடைத்த வீடு போல உண்மை நிலவரத்துக்கு மிக மிக பக்கமாக எழுதியிருக்கிறார் ஆன்டி வெயர்.

எலக்ட்ரோலிஸிஸ் முறையால் தண்ணீர் தயாரிப்பது, மனித மலத்தை உரமாக பயன்படுத்தி கொண்டு கிழங்கு செய்வது என்பன போன்ற ஐடியாக்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது மார்க் பூமியுடன் தொடர்பு கொள்ள செய்யும் ஐடியா. அந்த ஒரு ஐடியா தான் ஒரு சாதாரண கதாசிரியரான ஆன்டியின் கதையை உலகத்தரமான அறிவியல் புனைவுக் கதையாக மாற்றுகிறது. சினிமாக்காரர்களுக்கே இந்த ஐடியா தோன்றியிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான். 7 மாதங்களுக்குப் பிறகு காய்ந்து போன கருவாடு போல் வரும் மார்க் வாட்னியை பார்த்தால் நமக்கும் அதிர்ச்சியாகிறது.

திரைப்படத்தின் க்ளைமாக்ஸில், மார்க்கை விண்வெளி ஓடத்திலிருந்து கயிறு கட்டி மீட்கும் ட்ரிக் நிறைய சையின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் வந்துவிட்டது. ஆனால் மார்ஷியன் திரைப்படத்தில் ஒரு வித்தியாசம். எடையை குறைப்பதற்காக, கண்ணாடி ஜன்னல்கள், ராக்கேட்டின் மூக்கு என எல்லாவற்றையும் கழற்றி வீசிவிடுகிறார் மார்க். மார்ஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் அழுத்தம் மிக மிக குறைவு. இருப்பினும், வேகமாக எழும்பும் ராக்கேட்டின் மேல் அபரிமிதமான வெப்பத்தை தரவல்லது தான்.

மார்ஸ் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரிந்ததும் மார்ஸுக்கு செல்ல, ஹீட் ஷீல்டு செய்யவென நாசா ADEPT என்னும் பெயரில் தனியாக ஒரு ப்ராஜெக்டையே துவக்கியிருக்கிறது. அப்படியிருக்கையில் எப்படி இப்படி காட்சி அமைத்தார்கள் என்று தெரியவில்லை.

மார்ஸ் கிரகத்தில் வெப்பம் - 62 இருக்குமாம். அதே போல, சூறாவளியெல்லாம் வீசாதாம். லேசாக எதிர்வீட்டு புவனா கடந்து போகையில் தவழும் மல்லிகை மணம் போல இருந்தாலே அதிகம் என்கிறார்கள்.

எப்படியோ ஒரு நல்ல சயின்ஸ் ஃபிக்ஷன் பார்த்த அனுபவம் நிச்சயம். மார்ஸ் கிரகத்தை விண்வெளியிலிருந்து காட்டும் காட்சிகள் தூள். ராஜகாளியம்மன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் கண்கள் போல செக்கச்செவேலனெ இருக்கிறது. சிகப்பு கிரகம் என்று சொல்வது பொறுத்தம் என்றே தோன்றுகிறது.

என் நண்பர் இந்த படத்தை அமேரிக்காவின் ரீகல் தியேட்டரில் பார்த்திருக்கிறார். 3டி யில் பார்த்தாராம். 300 - 400 இருக்கும் மொத்த இருக்கைகளில் அவர் ஒரு ஐம்பது பேர்களுடன் பார்த்திருக்கிறார். பெரும்பாலான இருக்கைகள் காலி. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குவதாக கேள்வி.

எப்படி என்பது விளங்கவில்லை. இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் முந்தைய படமான எக்ஸோடஸும் 3டி தான். அதில் விட்ட பெயரை இதில் எடுத்துவிட்டார் என்றும் சொன்னார்கள். திரைப்படத்தில் நெளிய வைக்கும் ஒரு லவ் சீன் கூட இல்லை. காதல் மசாலாக்கள் ஏதும் இல்லாமல் நிம்மதியாக படம் பார்க்க முடிகிறது.

ஆனால் படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்காக அதிலும் அதையெல்லாம் 3டியில் பார்ப்பதற்காக நிச்சயம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் மார்ஷியன்.


 - இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)

#நன்றி
கீற்று(http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/29352-2015-10-12-06-20-37 )

No comments:

Post a Comment